September 11, 2015

வரிவிலக்கு பத்திரங்கள் (TAX FREE BONDS )- ஒரு அறிமுகம் .

பாதுகாப்பான முதலீடு - வரிவிலக்கு பத்திரங்கள் ஒரு அறிமுகம் 

மிக அதிகமான மக்கள் பாதுகாப்பான முதலீட்டையே விரும்புகிறார்கள். வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை குறைக்கும்பொழுது அவர்கள் சற்று கலக்கமடைந்து  வேறுவிதமான திட்டங்களை நோக்கி திரும்புகிறார்கள் .மேலும் வங்கிகளிலேயே வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பொழுதும் வரும் வட்டித்தொகை குறிப்பிட்ட அளவை மீறும்பொழுது வங்கிகளும் வரிபிடித்தம் செய்தே வட்டித்தொகையை திரும்ப தருகிறார்கள். வரும் வட்டி தொகையிலும் வரி பிடித்தம் செய்வதை தாமதமாகவே அறிவதால் மேலும் குழம்புகின்றனர்.இவர்களின் இந்த குழப்பத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான மோசடி நிதி நிறுவனங்கள் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள். இந்த வித இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும் விதமாக வருகிறது வரிவிலக்கு பத்திரங்கள் (Tax Free Bonds ).

வரிவிலக்கு பத்திரங்கள் (TAX FREE BONDS )- ஒரு அறிமுகம் .

வரியில்லாத பத்திரங்கள் (Tax free bonds) என்பது குறித்து பலரும் கேள்விபட்டிருக்கலாம். ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியாது. முதலீட்டாளர்களுக்கு வட்டியாகக் கிடைக்கும் பணத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்பதை குறிக்கும் பத்திரத்திற்கு தான் வரியில்லாத பத்திரங்கள் என்று பெயர்.வரியில்லாத பத்திரங்களின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை. மேலும் மற்ற வருவாய்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் போது, இந்த தொகை அதில் சேர்க்கப்படாது.வரியில்லாத பத்திரங்கள் அரசு அங்கீகாரம் கொண்ட நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகியவற்றில் வரியில்லாத பத்திரங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட எளிய வழிகள் உள்ளன.

வரியற்ற வருவாய்

வரி இல்லா பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு முதலீட்டாளர்களிடம் வரி பிடித்தம் செய்யப்படுவது இல்லை. இத்தகைய பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி கிடையாது. மேலும் இந்த வருமானம் வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு அங்கமாக கருதப்படாது. அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய வரியை கணக்கிடும்போது, இந்த பாண்ட்களிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயை உங்கள் மொத்த வருவாயோடு சேர்த்துக் கணக்கிட வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட்டை தொடங்கி அதன் மூலம் பத்தாயிரம் ரூபாய் வட்டி வருமானால் அதனை மொத்தவருமானத்தில் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனால் வரிச் சேமிப்புப் பத்திரங்கள் வாங்கினால் அதனைக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. எனவே இதன் மீது நீங்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.

இத்தகைய பத்திரங்கள் அரசு மற்றும் தனியார் சேர்ந்து நடத்தும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்திய அரசாங்கம் கிரேக்கத்தின் வழி சென்று கடன் நெருக்கடி பிரச்சனையில் சிக்கினால் மட்டுமே இந்தகைய பத்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பத்திரங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. எனவே, இது முதலீட்டிற்கு நீர்மைத்தன்மையை வழங்குகிறது. எனினும், இத்தகைய பத்திரங்கள் பங்கு போல் பெரிய அளவில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. 

வட்டி விகிதங்கள்

வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நேரத்தில் அரசாங்கத்தின் வரி இல்லா பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு ஒரு நேர்மறையான பந்தயம் ஆகும். இந்த பத்திரங்கள் நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுத்து, இரண்டாம் நிலை சந்தை வழியாக வெளியேற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பத்திரங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததன் மூலம், கடந்த ஆண்டு அவர்கள் முதலீட்டு நிறுவனத்தை பொறுத்து 8.20 முதல் 8.35 சதவீதம் வரை வரி இல்லா வருமானத்தை பெற்றார்கள். இத்தகைய பத்திரங்களை வரி சேமிக்கும் பத்திரங்களுடன் ஒப்பிட்டு குழம்பக் கூடாது. வருமான வரி சட்டம் 80 சிசிஎப் பிரிவின் படி, வரி சேமிக்கும் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு அங்கமாக கருதப்படும்.

இதில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்?

நீங்கள் ஏற்கெனவே வரி செலுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் இதில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்ற கேள்வி தோன்றலாம். உண்மையில் இது மிகவும் நல்ல கேள்வி. ஒரு நபர் அதிகபட்ச வரி அடைப்புக்குள் (30.9% வரி விகிதம்) இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த பாண்ட்கள் மீதான அவரது வரி விதிப்புக்கு முந்தைய ஈட்டமானது, 10 வருடங்கள், 15 வருடங்கள் மற்றும் 20 வருடங்கள் வரையிலான காலகட்டங்களுக்கு தலா 11.96%, 12.64% மற்றும் 12.52% என்ற விகிதங்களில் இருக்கும். ஒரு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் உங்களுக்கு அளிக்கக்கூடிய அதிகபட்ச விகிதம் 9.25% மட்டுமே ஆகும்.

20% வரி அடைப்பு

இப்போது நீங்கள் 20% வரி அடைப்புக்குள் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த பாண்ட்கள் மீதான வட்டி மூலம் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஈட்டம் 10 வருடங்களுக்கு 9.9% ஆகவும், 15 வருடங்களுக்கு 10.45% ஆகவும், 20 வருடங்களுக்கு 10.33% ஆகவும் இருக்கும். இதுவும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களை விட அதிமானதே.


பாதுகாப்புக்கு உத்தரவாதம்

உயர்ந்த மதிப்பீடு மற்றும் அரசு ஸ்தாபனம் போன்ற அம்சங்கள் இதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன: ஆர்இசி என்பது மத்திய அரசுக்கு சொந்தமானதொரு நவரத்னா ஸ்தாபனமாகும். அதனால் இந்த பாண்ட்கள் பாதுகாப்பு ரீதியில் உச்சபட்ச உத்தரவாத்துடன் திகழ்கின்றன. மேலும் இவற்றின் அதிக பட்ச பாதுகாப்பை குறிக்கும் வண்ணம் ஏஏஏ (AAA) என்ற மதிப்பீடு சான்றிதல் இந்த பாண்ட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம்?

வெளிநாட்டு-வாழ் இந்தியர்கள், தகுதி வாய்ந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள், தனிநபர் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் பிரிவினையற்ற இந்துக் குடும்பங்கள் (HUF) ஆகியோர் முதலீடு செய்யலாம்.


லாபகரமான முதலீடு!!

பாண்ட் ஈட்டங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், எதிர்காலத்தில் விநியோகிக்கப்படக்கூடிய வரியற்ற திட்டங்கள் இத்தகைய அதிகமான வட்டி விகிதங்களுடன் வழங்கப்படுமா என்பது சந்தேகமே. இவை அனைத்தும் ஆர்இசியை கட்டாயமாக சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய ஒன்றாகத் தோற்றமளிக்கச் செய்கின்றன.



No comments:

Post a Comment